ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Thursday, January 20, 2011

குடியாமை

களம்:- கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கெதிரான மக்கள் மறியல். (ஊர்
ஞாபகம் இல்லை)
பொறி:- குறுக்குப் புத்தி.

கவிதை(?)
நல்ல காலம்
பொறக்கும்
போல இருக்கு!


கள்ளுக்கடைக்கும்
கவர்மென்ட் கடைக்கும்
எதிராய்
எல்லாம் திரண்டு
எதிர்ப்பை
காட்டினார்கள்.

நல்ல காலம்
பொறக்கும்
போல இருக்கு!

எல்லாம் முடிந்து
இல்லம்
செல்லும்முன்
கணக்கு வழக்கு
பார்க்கப்பட்டது.

கூட்டத்தில்-
யார் யாரோ
குடித்துவிட்டு,
கணக்கில்
வழக்கிருப்பதை
கைகலப்புடன்
கடைசிவரை
பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்ல காலம்
பொறக்குமா சாமி?

Thursday, January 13, 2011

தைப் பொங்கல் வாழ்த்து!

நல்லவர்களே,
நண்பர்களே,
எல்லோரையும் போல
நானும் உங்களுக்கு
தைப்பொங்கல்,
தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

இலங்கை “இராவணு”வம்
நம் தமிழர்
உதிரத்தில்
இனியும்
இன்பங்காணாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

யாரும் இனி
இராஜாவின்
இலக்கை
எந்த
“G” கொண்டும்
எட்டாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

எந்தஅரசு வந்தாலும்
இலவசமாய்ப் பெற
ஏதும் இல்லாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

ஏறிவிட்ட
காய்கறிகளின் விலை
என்றாவது
இறங்குமென்றால்,
இன்றேகூட
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

அரசியல்வாதிகளும்
அரசாங்க அதிகாரிகளும்
உண்மையிலே
ஏழைகளுக்காய்
உழைப்பதாயிருந்தால்
உடனே
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

நாம் பெற்றபிள்ளை(கள்)
நம்மையும் மதித்து
நம் பேச்சை
கேட்கும் பட்சத்தில்,
இப்போதே கூட
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

கனவுகள் பல
கண்டு
கட்டியவள்
என்றேனும்
இனிதாய் சமைக்கக்கூடும்
இசைவாய்ப் பேசக்கூடும்.
அன்றுதான்
வாழ்த்துக்களை
சொல்லுவேன். (அப்படின்னா, எப்பவும் கிடையாதுன்னு அர்த்தமில்ல!)

அதுவரையில்-
அழுவதற்கு
ஆயிரமாயிரம்
செய்திகளும்
தொடர்களும்
இருந்தாலும்
அவற்றில் சிக்காது,
சிரிப்பதற்கு
ஏதேனும்
சின்ன சந்தர்ப்பம்
கிடைத்தாலும்
“ச்சிக்” கென பிடிப்பீர்,
சிரித்தே வாழ்வீர்!!!
இனிய வாழ்த்துக்கள்!!!
-2000பி.எம்
13012011

Tuesday, January 4, 2011

செய்வோம் சிந்தனை!!

சிந்தனை செய்!(தலைப்பு)

எல்லோருக்கும் இனிய 64வது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மகனே!
என்ஜினியராகவோ
டாக்டராகவோ
ஆகி
என்ன சம்பாதித்து
விடுவாய்?
எவ்வளவு செலவானாலும்
பரவாயில்லை,
எப்படியாவது
பீகாரிலோ
உத்தரபிரதேசத்திலோ
ஜார்கண்டிலோ
எம் எல் ஏ
ஆகிவிடு.
மேலவைத் தேர்தலில்
உன்
ஓட்டைவிற்றே
கோடீஸ்வரன் ஆகலாம்.

காசுபடைத்தவன் வீட்டு
பிள்ளையாய் பிறந்திருந்தால்
கண்டபடி காரையோட்டி
யாரையும் கொல்லலாம்,
இந்தியா-
ஏழைகளின் நாடு.
சிந்தனை செய்
ஏழையை எளிதாய்
கொல்லலாம்.

விளையாட்டுத்துறை
ஏன் ஆனது
விவகாரத்துறை?
காதோர
நரைக்கிழடுகளிடம்
கற்புநெறி காணாமல்
போனது ஏன்?
சிந்தனை செய்.

சிந்தனை செய்
செய்து,
எப்பாடு பட்டேனும்
காமன்வெல்த் கமிட்டியில்
இடம் பிடித்துவிடு!
இல்லையென்றாலும்-
அதன் விளையாட்டு
    வியாபாரத்தில் அங்கமாகிவிடு!
    லட்ச்ச லட்ச்சங்களை 
    எளிதில் லாவிவிடலாம்.


பட்டப்பகலெல்லாம்
பாம்பாய் நெளியும்
வரிசையில் நின்று
ஓட்டுப்போட்டு
சட்டமன்றத்திற்கும்
நாடாளுமன்றத்திற்கும்
நாம் அனுப்பிய
கனவான்கள்
சதிராட்டம் ஆடி
கோடிகளை
கொளுத்துகிறார்களே-
சிந்தனை செய்,
வெகுஜனமே
மீண்டும் வருகிறது
தேர்தல்.

படைத்தவனையும் நீ
வியாபாரப் பொருளாக்கி
கலர்கலர் போர்வையில்
கடைவிரித்து செய்யலாம்
வியாபாரம்.
வீடியோ கேமராவிடம்
மட்டும்
வேண்டும் கவனம்!!

வீரப்பன் வீழ்ந்துவிட்டான்.
என்ன கடத்தலாம்,
சிந்தனை செய்.
மரம், தந்தம்
போதைப் பொருள்…
எதுவானாலும் சரி!
காக்கிசட்டைகள்
கஞ்சி குடிக்க
கைக்கூலியை
நம்பித்தானே
கழிக்கிறார்கள் நாட்களை!

வாகனங்களில்
வந்துபோகும்போது
சாலையின்
நிறுத்தக்கோட்டில் நிற்பது
கேவலமென்று   
கருதுகிறாயே
ஏனென்று
சிந்தனை செய்.

விடியாத பொழுதுகளிலும்
விளக்குவைத்த பின்னரும்
டியூஷன் டியூஷன்.
இடைப்பட்ட நேரத்தில்
ஏகப்பட்ட பாரத்தோடு
பள்ளிக்கு படையெடுப்பு!
கொட்டிக்கொடுத்த
பணம்-
கொண்டு வரவில்லை
நீ-
மனதிற்கொண்ட மதிப்பெண்ணை!
ஏனென்று,
இனியாவது சிந்தனைசெய்,
தகப்பனே!

சிந்தனை செய்!
கட்டிங்
அடித்துவிட்டுப்போனால்
கத்தப்போகும் கட்டியவளிடம்
காரணம்
என்ன கூறுவாய்
என்று-
இப்போதே
சிந்தனை செய்,
என் சிட்டிசனே!

எப்படி சொல்லியும்
எவ்வளவு அழுதும்
இன்னமும்
இணைபிரியாது
இருக்கும்
இல்லாளும்
எரிச்சலூட்டும்
நெடுந்தொடர்களும்
எப்போது பிரிவார்கள்
எப்போது பிரிவார்கள்
சிந்தனை செய்,
ஆண் இனமே
சிந்தனை செய்.

யாருக்கும், எதற்கும்
கையூட்டுக் கொடுத்தால்
ஆகிவிடும் காரியம்.
கொடுப்பதற்கும்-
அடுத்தவனிடம்
பறிப்பதற்கும்
எப்படித் தயாரானாய்
நீ?
செம்மையாய்.
சிந்தனை செய்
    
சிந்தனை செய்வீர்
என் சிட்டி டீ வி
நேயர்களே!
இந்த 64வது
இந்திய சுதந்திர
தினத்திலாவது
ஏற்போம்
ஒரு சபதம்!

இயன்றவரை
எதனையும்
யாரையும்
நம் சுயநலத்திற்காய்
விலை பேசாதிருக்க
ஏற்போம்
ஒரு சபதம்!

நம் தனிமனித
ஒழுக்கம்
தரக்கூடும்,
தரமான இந்தியாவை
இன்னும்
ஈரைந்து 
ஆண்டுகளில்.

ஆதலினால்,
இன்றே ஏற்போம்
சபதம்…..
எதையும்
விலை பேசாதிருக்க,
எதையும்
விலை பேசாதிருக்க
இன்றே ஏற்போம்
சபதம்…..
   
(சிட்டி டிவிக்காய் அந்தமான் தமிழர் சங்கத்தில் 09.8.2010 அன்று பதிவு செய்தது. 2Gக்கு முன்பு.)


டூ இன் ஒன் (அ) ஒன்றில் இரண்டு!!

களம்:- ச்சில் டிசம்பரின்(2009) சென்னை…

பொறி:- ஏசி அறையின் ஆசுபத்திரி கவுண்டர் + ரோட்டோர தள்ளுவண்டி    காய்கறி விலை!

கவிதை:-

அப்பவும்
எப்பவும்
நோயுறுவேன்..

பத்திற்கும்
இருபதிற்கும்
மருந்து மாத்திரைகள்
சாப்பிட்டு
மாதங்களை
கடத்தி வந்தேன்.

எதற்கும் இருக்கட்டும்
என்று
இங்கிலீஷ் மருத்துவரை
சென்று பார்த்தேன்.
எல்லா டெஸ்ட்டும்
ஏகமாய் பணமும்
எடுத்துவிட்டு
பழங்களும்,
நிறைய காய்கறிகளும்
சாப்பிடச் சொன்னார்.

செய்தேன்…
வெறும்
நோயாளியானவன்
இப்போது-
கடனாளியும் ஆனேன்.


அப்பொ கேட்டீங்க…. இப்ப தரேன்…. புத்தாண்டு (ஆ) வாழ்த்துக்களோட….


Add caption